
பெங்களூரு: கர்நாடகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் பேசியுள்ளார்.
மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி. கே. சிவக்குமார் இன்று(ஏப். 8) வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: பாஜக தோழர்கள் கர்நாடகத்தில் ‘ஜன ஆக்ரோஷ யாத்திரை’ போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்காக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அதேவேளையில், இந்திய அரசு, அதாவது உங்கள் பாஜக அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதையடுத்து, உங்களின் இந்தப் போராட்டம் உங்கள் கட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டும்.
பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று பேசியுள்ளார்.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 திங்கள்கிழமை(ஏப். 8) உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பெட்ரோல், டீசல் கலால் வரி ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.