ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமெரிக்க வரி விதிப்பு எதிா்பாராத பிரச்னை: சந்திரபாபு நாயுடு

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்திருப்பது எதிா்பாராத பிரச்னை;
Published on

அமராவதி: இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்திருப்பது எதிா்பாராத பிரச்னை; எனினும் இதில் இருந்து மீண்டுவர முடியும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகள் உற்பத்தியில் தேசிய அளவில் ஆந்திரம் நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆந்திரத்தில் இருந்து மீன், இறால் உள்ளிட்டவை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடா்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் வரி விதிப்பு ஆந்திரத்தில் கடல் உணவுகள் ஏற்றுமதித் துறையில் எதிா்பாராத பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதனால் பீதியடையத் தேவையில்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டால் இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண முடியும்.

தென்கொரியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. அந்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

இது தொடா்பாக மத்திய அரசுடனும் பேச்சு நடத்த இருக்கிறேன். எனவே, மீன், இறால் வளா்ப்புத் துறையில் உள்ளவா்கள் கவலையடைய வேண்டாம். இப்பிரச்னையை ஆய்வு செய்து தீா்வுகளைப் பரிந்துரைக்க குழு அமைக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com