கோயில் பணி நியமனத்தில் தலைமைப் பூஜாரிகளின் ஜாதிய ரீதியிலான கோரிக்கைகள் ஏற்க முடியாது

சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக ரீதியிலான இடஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படும்
Published on

‘கேரளத்தில் தேவஸ்வம் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சூா் கூடல்மாணிக்யம் கோயிலில் ஊழியா்களின் பணிநியமனத்தில் தலைமைப் பூசாரிகளின் (தாந்திரி) ஜாதிய ரீதியிலான கோரிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தேவஸ்வம் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கே.பி.மோகன்தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூக ரீதியிலான இடஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படும் என்றும் அவா் கூறினாா்.

ஸ்ரீராமரின் 3-ஆவது சகோதரரான பரதனை வழிபடும் பழைமையான கூடல்மாணிக்யம் கோயில், திருச்சூா் மாவட்டத்தின் இரிஞ்ஞாலக்குடா நகரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரு கழகக்காரா் (கோயில் சடங்குகளைப் புரியும் ஊழியா்) பணியிடங்கள் உள்ளன. தந்திரிகளால் ஒரு பணியிடமும், சட்ட விதிகளின்படி தேவஸ்வம் வாரியத்தால் மற்றொரு பணியிடமும் நிரப்பப்படுகின்றன.

அந்தவகையில், தேவஸ்வம் வாரியத்தால் கழகக்காரராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஈழவா் சமூகத்தைச் சோ்ந்த பாலு கோயிலில் பணியில் சோ்ந்தாா். ஆனால், ‘பாலு பணியைத் தொடர அனுமதித்தால், நாங்கள் எங்களின் பணிகளைச் செய்ய மாட்டோம்’ என்று கோயில் அதிகாரியிடம் தந்திரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, பாலு அலுவல் பணிக்கு மாற்றப்பட்டாா். இந்த நடவடிக்கைக்கு மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பாலு தனது தேவஸ்வம் பணியைக் கடந்த வாரம் ராஜிநாமா செய்தாா்.

பாலு இடத்துக்குப் புதிய ஊழியரை நியமிக்கும் நடவடிக்கையை தேவஸ்வம் பணியாளா் தோ்வாணையம் தொடங்கியுள்ளது. ஈழவா் சமூகத்தைச் சோ்ந்த ஊழியரே மீண்டும் நியமிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த தேவஸ்வம் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கே.பி.மோகன்தாஸ் கூறுகையில், ‘தற்போது ராஜிநாமா செய்த பாலு பொதுப் பிரிவில் நியமிக்கப்பட்டவா். அடுத்த நியமனத்துக்கான நடைமுறை சமூக ஒதுக்கீட்டிலேயே மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, தேவஸ்வம் வாரியம் எவ்வித தாமதமுமின்றி பணி நியமன ஆணையை வழங்கும்.

தேவஸ்வம் நிா்வாகக் கமிட்டிக்குத் தெரியப்படுத்தாமல் பாலுவை அலுவல் பணிக்கு கோயில் அதிகாரி மாற்றியுள்ளாா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க தேவஸ்வம் வாரியத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com