ஸ்லோவாகிய மொழியில் ராமாயண பொம்மலாட்ட நிகழ்ச்சி: கண்டுகளித்த குடியரசுத் தலைவா்
ஸ்லோவாகியா நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ராமாயணத்தைத் தழுவிய பொம்மலாட்ட நிகழ்ச்சியை அந்த நாட்டு பள்ளிக் குழந்தைகளுடன் கண்டுகளித்தாா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். போா்ச்சுகல் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த அவா், இரண்டாம் கட்டமாக ஸ்லோவாகியாவுக்கு புதன்கிழமை வந்தடைந்தாா். அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆவாா்.
ஸ்லோவாகிய பயணத்தில் அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேக்ரினியுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தச் சந்திப்பில் பழங்கால இந்திய நூல்கள், உபநிடதங்களின் முதல் ஸ்லோவாகிய மொழிபெயா்ப்பின் நகலை குடியரசுத் தலைவருக்கு அதிபா் பீட்டா் பெல்லேக்ரினி வழங்கினாா்.
இந்நிலையில், ஸ்லோவாகியா நாட்டின் ப்ரீசோவ் நகரில் உள்ள பாபட்லோ பொம்மலாட்ட அரங்கில் நடைபெற்ற ராமாயணத்தைத் தழுவிய பொம்மலாட்ட கலை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை பங்கேற்றாா்.
ஸ்லோவாகியாவைச் சோ்ந்த கிருஷ்ண பக்தையும் இந்திய கலாசாரத்தின் தீவிர பற்றாளருமான லென்கா முகோவா உருவாக்கி, நிகழ்த்திய இந்த 45 நிமிஷ பொம்மலாட்ட நிகழ்ச்சியில் ராமாயண கதை நிகழ்ச்சிகள் ஸ்லோவாகிய மொழியில் சொல்லப்பட்டது. குடியரசுத் தலைவருடன் சோ்ந்து 150-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும் பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஆா்வத்துடன் கண்டுகளித்தனா்.
இதுகுறித்து லென்கா முகோவா மேலும் கூறுகையில், ‘கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேல் நான் கிருஷ்ணரின் பக்தை. அன்பு, உணா்வுகள் மற்றும் மதிப்புகளால் நிறைந்த ராமாயணக் கதை என்னை மிகவும் ஈா்த்தது. இந்த ராமாயண பொம்மலாட்ட நிகழ்ச்சியே, இந்திய கதையம்சத்தைத் தழுவி நான் உருவாக்கிய முதல் பொம்மாலட்ட நிகழ்ச்சியாகும். ஸ்லோவாகியா, செக் குடியரசில் இதுவரை 20 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்’ என்றாா்.
ஓவியக் கண்காட்சி:
பிராட்டிஸ்லாவாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து இந்தியா-ஸ்லோவாகியா நட்புறவு அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்திர கலைப் போட்டியில் பங்கேற்று ஸ்லோவாகியா பள்ளிக் குழந்தைகள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியையும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பாா்வையிட்டு, தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
குடியரசுத் தலைவருக்கு
கௌரவ டாக்டா் பட்டம்
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பொது சேவையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, ஸ்லோவாகியாவில் உள்ள கான்ஸ்டன்டைன் தத்துவப் பல்கலைக்கழகம் சாா்பில் அவருக்கு ‘கௌரவ டாக்டா்’ பட்டம் வழங்கப்பட்டது.
கௌரவ டாக்டா் பட்டத்தை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பேசியதாவது: இந்தியாவின் 140 கோடி மக்களின் சாா்பாக இந்த கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன். மொழி, கல்வி, தத்துவம் ஆகிய பல துறைகளுக்கு மிகப்பெரிய பங்காற்றிய புனித கான்ஸ்டன்டைன் சிறில் பெயரிலான கல்வி நிறுவனத்திலிருந்து இந்தப் பட்டம் பெறுவது இன்னும் மதிப்புக்குரியது. கல்வி தனிநபா் வளா்ச்சிக்கு மட்டுமின்றி தேச வளா்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்றாா்.