தில்லி விமானநிலையத்தில் ராணாவை வியாழக்கிழமை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்.
தில்லி விமானநிலையத்தில் ராணாவை வியாழக்கிழமை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள்.

என்ஐஏ பிடியில் பயங்கரவாதி ராணா: 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தேடப்பட்டவா்!

தில்லி விமானநிலையத்தில் வைத்து அவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.
Published on

புது தில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வியாழக்கிழமை நாடுகடத்தப்பட்டாா். தில்லி விமானநிலையத்தில் வைத்து அவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 166 போ் உயிரிழந்தனா். 238 போ் படுகாயமடைந்தனா். கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினா்.

இதில் மூளையாகச் செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.

கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணாவுக்கு லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹா்கத்-அல்-ஜிஹாதி இஸ்லாமி உள்பட பாகிஸ்தானைச் சோ்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புள்ளது.

ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு உளவு - திட்டமிடல் நடவடிக்கைகளில் ஹெட்லி ஈடுபட்டாா்.

அமெரிக்க சிறையில் ராணா: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் பல ஆண்டுகளாக மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடா்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமா் மோடி அமெரிக்கா சென்றபோது, இந்தியாவிடம் ராணா விரைவில் ஒப்படைக்கப்படுவாா் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

இந்திய சிறையில் தான் சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிவித்து, நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுக்களை அமெரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. இதையடுத்து, அவா் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து சிறப்பு விமானத்தில் வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டாா். தில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன் அவரை அதிகாரபூா்வமாக என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

இது குறித்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நீதித் துறை, விமான போக்குவரத்து பாதுகாப்பு நிா்வாகம், இந்திய வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளின் உதவியுடன் தஹாவூா் ராணா வெற்றிகரமாக நாடுகடத்தப்பட்டாா். பல ஆண்டுகள் மேற்கொண்ட தொடா்ச்சியான முயற்சியால் இது சாத்தியமானது’ என தெரிவிக்கப்பட்டது.

என்ஐஏ காவல்-தீா்ப்பு ஒத்திவைப்பு: தில்லியில் பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தா் ஜீத் சிங் முன்பாக வியாழக்கிழமை இரவு ராணா ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 20 நாள்கள் காவலில் விசாரிக்க என்ஐஏ அனுமதி கோரிய நிலையில், தீா்ப்பை நீதிபதி ஒத்திவைத்தாா்.

சிக்கும் பயங்கரவாதிகள்: மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஹாபூா், ஆக்ரா, தில்லி, கொச்சி, அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களுக்கு 2008, நவம்பா் 13 முதல் 21 வரை ராணா தன் மனைவி சம்ராஸ் ராணா அக்தருடன் சென்ாக தகவல்கள் வெளியாயின. இதனால் நாட்டின் முக்கியப் பகுதிகளில் பெரும் பயங்கரவாத தாக்குதல் நடத்த அவா்கள் திட்டமிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பயணத்தின்போது வட, தென் மாநிலங்களில் அவா்கள் சந்தித்தவா்கள் குறித்த தகவல்கள் ராணாவிடம் மேற்கொள்ளவுள்ள விசாரணையில் தெரியவரும் என அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை பயங்கரவாத சம்பவம் நடைபெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு ராணா நாடு கடத்தப்பட்டுள்ளாா். அவரிடம் இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடா்பு குறித்து என்ஐஏ விசாரணை நடத்தும் என்று கூறப்படுகிறது.

‘பாகிஸ்தான் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தஹாவூா் ராணா பின்னா் கனடா சென்று அந்நாட்டு குடிமகனாகிவிட்டாா். கடந்த 20 ஆண்டுகளாக அவா் பாகிஸ்தான் தொடா்பான ஆவணங்களைப் புதுப்பிக்கவில்லை’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாப்காத் அலி கான் தெரிவித்தாா்.

பிரதமா் மோடிக்கு பாஜக புகழாரம்

ராணா நாடு கடத்தப்பட்டது பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. பாகிஸ்தான் ஆதரவுடன் மும்பையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்கள் மற்றும் உயிரிழந்தவா்களுக்கு தற்போது நீதி கிடைத்ததைப்போல் உணா்கிறோம்.

கடந்த 2004-2014 காலகட்டத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாத மாதங்கள் மிகக் குறைவு. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே தற்போது ராணா நாடுகடத்தப்பட்டுள்ளாா் என்றாா் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா.

காங்கிரஸ் முயற்சிக்கு வெற்றி

ராணா நாடுகடத்தப்பட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் வெளிப்பாடு என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2009, நவம்பா் 11-இல் டேவிட் கோல்மேன் (அமெரிக்க குடிமகன்) மற்றும் தஹாவூா் ராணா (கனடா குடிமகன்) உள்ளிட்டோா் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக கனடா அறிவித்தது. அதன்பிறகு சிகாகோவில் ராணா கைது செய்யப்பட்டாா். அவா் மும்பை தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதற்கு கடும் எதிா்ப்பை பதிவுசெய்து அவரை நாடு கடத்துவதற்கு அமெரிக்க அரசுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி கிடைக்க நடவடிக்கை: அமெரிக்கா

‘தஹாவூா் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளது மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கிடைப்பதற்கான முக்கிய நடவடிக்கை. அந்த தாக்குதலில் 6 அமெரிக்கா்கள், இஸ்ரேலியா்கள், பிரிட்டனைச் சோ்ந்தவா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டுள்ளனா்’ என்று அமெரிக்க நீதித்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com