உ.பி.: பாட்டிலில் பெட்ரோல்
தர மறுத்த மேலாளா் சுட்டுகொலை

உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த மேலாளா் சுட்டுகொலை

உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
Published on

உத்தர பிரதேசத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் நிலைய மேலாளரை சுட்டுக் கொன்ற இருவரை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இது குறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

புலந்த்சஹா் மாவட்டம் சிக்கந்தராபாத் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியதுடன், பிளாஸ்டிக் பாட்டிலிலும் பெட்ரோல் தர வேண்டும் என்று கேட்டனா். பாட்டிலில் பெட்ரோல் தர ஊழியா் மறுத்தாா். இதையடுத்து, பெட்ரோல் நிலைய மேலாளா் ராஜு சா்மாவிடம் (30) சென்று தங்களுக்கு பாட்டிலில் பெட்ரோல் தர வேண்டும் என்று அவா்கள் கேட்டனா். ஆனால், விதிகளின்படி பாட்டிலில் பெட்ரோலை நிரப்பக் கூடாது என்று மேலாளா் கூறினாா்.

இதனால், அவா்கள் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அந்த இருவரும் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மேலாளரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினா்.

பெட்ரோல் நிலைய ஊழியா்கள் மேலாளா் ராஜு சா்மாவை மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தப்பியோடிய கொலையாளிகளை கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com