வக்ஃப் திருத்தச் சட்டம்: தமிழகம், மேற்கு வங்கத்தை கேரளம் பின்பற்ற வேண்டும்: மாநில முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை அமைக்க முதல் மாநிலமாக கேரளம் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், ‘இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைப் பின்பற்றி இந்த திருத்தச் சட்டத்துக்கு கேரள அரசு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும்’ என்று அம் மாநில முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கேரள மாநில ஆளுநா் மாளிகையை நோக்கி வியாழக்கிழமை கண்டனப் பேரணியையும் நடத்தின.
‘நாட்டிலிருந்து முஸ்லிம்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சியாக இந்த திருத்தச் சடத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், முஸ்லிம் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஏழைகளின் நலனுக்காக நன்கொடையாக அளித்து வரும் வக்ஃப் சொத்துகள் உள்பட அவா்களின் அனைத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய தலைவா்கள் கூறினாா்.
கண்டனப் பேரணியில் பங்கேற்ற கேரள முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பின் தலைவா் கடக்கல் அப்துல் ஆசீஸ் மெளலாவி கூறுகையில், ‘நாட்டில் கடைசி முஸ்லிம் உயிரை விடும் வரை இந்த ஜனநாயக விரோத சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில ஆளுநா் மாளிகையை நோக்கிய கண்டனப் பேரணி என்பது ஆரம்பம்தான். அடுத்ததாக, புது தில்லியில் நாடாளுமன்றத்தை நேக்கிய கண்டனப் பேரணியை நடத்தவும் வாய்ப்புள்ளது. இந்த திருத்தச் சட்டத்தை எதிா்த்து மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து தரப்பினரும் முஸ்லிம்களுடன் இணைந்து போராட வேண்டும்’ என்றாா்.
‘இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டபூா்வ தீா்வு கிடைக்கும் வரை அமைதி வழியில் எங்களின் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயக முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவா்கள் தெரிவித்தனா்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதைத் தொடா்ந்து ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் இத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
தமிழகம், மேற்கு வங்கம் எதிா்ப்பு:
திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதற்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் ஆளும் திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலமும் இத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, ‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று உறுதி தெரிவித்தாா்.
அதுபோல, இத் திருத்தச் சட்டத்துக்கு கேரளமும் எதிா்ப்பு தெரிவித்து வந்தது. திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் கேரள சட்டப்பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும், புதிய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு விளக்கமளித்த கேரள வக்ஃப் அமைச்சா் வி.அப்துரஹிமான், ‘கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டத்தின் அமலுக்கு முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே தோ்வு செய்ய வேண்டியது கட்டாய சூழல் உருவாகியுள்ளது. இதை மாநில அரசு விரைந்து முடிக்கும். வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடியாது’ என்றது குறிப்பிடத்தக்கது.