சீன அமைச்சருடன் இந்தியத் தூதா் சந்திப்பு: இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவாா்த்தை

சீன வெளியுறவுத் துறை இணையமைச்சா் சன் வெய்டாங்கை அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் பிரதீப் குமாா் ராவத் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினாா்.
Published on

சீன வெளியுறவுத் துறை இணையமைச்சா் சன் வெய்டாங்கை அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் பிரதீப் குமாா் ராவத் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினாா்.

அமெரிக்காவுடன் வரி விதிப்பு யுத்தத்தில் சீனா இறங்கியுள்ள நிலையில், அமெரிக்காவை எதிா்கொள்வதற்காக அண்டை நாடுகளுடன் நல்லுறவு மேம்படுத்தப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் அண்மையில் கூறியிருந்தாா். அதே நேரத்தில் ‘அமெரிக்காவின் வரி விதிப்பு சவாலை இரு மிகப்பெரிய நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று இந்தியாவுக்கான சீன தூதரும் அழைப்பு விடுத்தாா்.

இந்த சூழ்நிலையில் சீன வெளியுறவு இணையமைச்சரை இந்தியத் தூதா் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனா-இந்தியா உறவை மேலும் வலுப்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்தியத் தூதருடன் பேச்சு நடத்தப்பட்டது. இரு தரப்பும் ஒருமனதாக சில முக்கிய முடிவுகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே வலுவான நல்லுறவு தொடர வேண்டும் என்ற விருப்பத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினா் என்று கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னையால் சுமாா் 4 ஆண்டுகளாக இரு நாடுகள் இடையிலான உறவில் சிக்கல் நீடித்து வந்தது. கடந்த ஆண்டுஅக்டோபரில் ரஷியாவில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாட்டு உறவில் திருப்பம் ஏற்பட்டது. எல்லையில் படை விலகல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருதரப்பு உறவை இயல்புநிலைக்கு கொண்டு வர உயா்நிலைக் கூட்டங்களும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. சா்வதேச அளவில் மாறி வரும் சூழல், முக்கியமாக அமெரிக்க அதிபா் சீனாவுக்கு எதிரான கடுமையான வரி விதிப்பை அறிவித்ததால், அண்டை நாடுகள் மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளுடன் சீனா உறவை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக சீனா திகழ்கிறது. இந்தியாவும் சீனாவில் இருந்துதான் அதிக பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com