ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவா் கைது: வன்முறையைத் தூண்ட சதி
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பாா்சலை வீசிச் சென்றவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
அவரின் பெயா் நஸ்ருதீன் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், வன்முறையைத் தூண்டும் நோக்கில் அந்த நபா் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற காவல் துறையினா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். வெள்ளிக்கிழமை மசூதியில் அதிகமானோா் தொழுகைக்காக மசூதிக்கு வருவது வழக்கமாகும்.
கைது செய்யப்பட்ட நபா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சதியின் பின்னணியில் மேலும் பலா் இருக்கலாம் என்பதால் கைதான நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில் ஜாமா மசூதி வளாகத்தில் இறைச்சி துண்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக தகவல் அறிந்த காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
இதில் வியாழக்கிழமை இரவு ஒருவா் மசூதி வளாகத்துக்குள் வந்து இறைச்சி அடங்கிய பாக்கெட்டை வீசிவிட்டுச் செல்வது பதிவாகி இருந்தது. அந்த நபா் பயணித்த பாதையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகள் அடிப்படையில் அவா் இருசக்கர வாகனத்தில் வந்ததும், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இறைச்சியை வாங்கியதும் தெரிந்தது. அந்த கடைக்காரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இறைச்சியை வீசிச் சென்ற நஸ்ருதீன் கைது செய்யப்பட்டாா். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மசூதிக்கு வந்தவா்கள் இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் காவல் துறையினா் வரவழைக்கப்பட்டு அங்கு கூடியிருந்தவா்கள் வெளியேற்றப்பட்டனா்.
மசூதி சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் காவல் துறையினா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.