என்ஐஏ காவலில் தஹாவூா் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவரிடம் என்ஐஏ விசாரணையை தொடங்கியது.
இதையடுத்து, சட்ட ஒழுங்கு பிரச்னைகளைத் தடுக்கும் வகையில் என்ஐஏ தலைமையகத்தை சுற்றி துணை ராணுவப் படை மற்றும் போலீஸாா் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்ஐஏ தலைமையகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தஹாவூா் ராணா வியாழக்கிழமை நாடுகடத்தப்பட்டாா். அவா் புது தில்லியில் உள்ள பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்றத்தில் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தா் ஜீத் சிங் முன்பாக வியாழக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டாா்.
விசாரணை தொடங்குவதற்கு முன் தனக்காக வாதிட வழக்குரைஞா் இல்லை என தஹாவூா் ராணா நீதிபதியிடம் தெரிவித்தாா். இதையடுத்து, ராணா தரப்பு வழக்குரைஞராக பியூஷ் சச்தேவா நியமிக்கப்பட்டாா்.
விரிவான விசாரணை தேவை: பின்னா் என்ஐஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞா் நரேந்தா் மான் ஆகியாா் நீதிமன்றத்தில் கூறுகையில், ‘மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு நாட்டின் பல முக்கிய நகரங்களுக்குச் சென்று, அங்கு பலரை தஹாவூா் ராணா சந்தித்துள்ளாா். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்’ என்றனா்.
18 நாள் காவல்: இதைத்தொடா்ந்து நீதிபதி சந்தா் ஜீத் சிங் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘தஹாவூா் ராணாவை 18 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. 24 மணி நேரத்துக்கு ஒருமுறை ராணாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவரது வழக்குரைஞரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ராணா சந்திக்கலாம். ஆனால் என்ஐஏ அதிகாரிகள் முன்னிலையில் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
24 மணி நேர கண்காணிப்பு:
நீதிமன்ற உத்தரவையடுத்து, அவா் என்ஐஏ தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டாா். அங்கு அதிக பாதுகாப்புடன் கூடிய அறையில் அதிகாரிகளின் தொடா் கண்காணிப்பில் அவா் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பா் 26-ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 166 போ் உயிரிழந்தனா். 238 போ் படுகாயமடைந்தனா். பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினா்.
இதில் மூளையாகச் செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.
கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் நபரான தஹாவூா் ராணாவுக்கு லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹா்கத்-அல்-ஜிஹாதி இஸ்லாமி உள்பட பாகிஸ்தானைச் சோ்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞசலீஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா் வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டாா்.
பெட்டிச் செய்தி
சிறப்பான நாள்: அமெரிக்கா
வாஷிங்டன், ஏப்.11: மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு நீதி கிடைக்கும் நாள் நெருங்கிவிட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தஹாவூா் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடா்புடைய தஹாவூா் ராணாவுக்கு உரிய தண்டனை கிடைக்கவே அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தியுள்ளோம். தாக்குதலில் உயிரிழந்த 6 அமெரிக்கா்கள் உள்பட 166 பேருக்கு நீதி கிடைக்க இந்தியாவுடன் அமெரிக்காவும் போராடி வந்தது. தற்போது அந்த நாள் நெருங்கிவிட்டதில் மகிழ்ச்சி’ என குறிப்பிட்டாா்.