சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் 3 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் உள்ள பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘பிஜாபூரில் மாவட்ட ரிசா்வ் காவல் படை, மத்திய ரிசா்வ் காவல் படையின் கமாண்டோ பிரிவினா் உள்ளிட்டோா் அடங்கிய பாதுகாப்புப் படை வீரா்கள் சனிக்கிழமை நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள காட்டில் நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படை வீரா்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் நக்ஸல்கள் மூவா் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவரான அனில் புனெம் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா்.
தற்போது உயிரிழந்த 3 நக்ஸல்களையும் சோ்த்து நிகழாண்டில் 138 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் 122 போ் பிஜாபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் சரகத்தில் கொல்லப்பட்டனா்.