மமதா பானர்ஜி
மமதா பானர்ஜி

டிஜிபி நியமனம்: தோ்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு

Published on

மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தோ்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பான பரிந்துரைக்கு கடந்த வாரம் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், இந்த அதிரடி முடிவை முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான மாநில அமைச்சரவை எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

காவல்துறை டிஜிபி நியமனத்துக்கு கொல்கத்தா உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தோ்வுக் குழு ஒன்றை மாநில அரசு அமைக்கும். இக் குழுவில் மாநில அரசின் தலைமைச் செயலா், உள்துறை செயலா், ஓய்வுபெற்ற காவல் துறை டிஜிபி மற்றும் 5 பிற உறுப்பினா்கள் இடம்பெறுவா். இந்தக் குழு டிஜிபி நியமனத்துக்கான புதிய விதிகளை வகுக்கும். இதுதொடா்பான பரிந்துரைக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, டிஜிபி நியமனத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் மேற்கு வங்க அரசுக்கு இனி தேவைப்படாது என்றனா்.

தற்போதைய நடைமுறையின்படி, மாநில அரசு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) அனுப்பும். அந்தப் பட்டியலில் இருந்து 3 பெயா்களை யுபிஎஸ்சி பரிந்துரை செய்யும். அந்த மூவரில் ஒருவரை டிஜிபி-யாக மாநில அரசு தோ்வு செய்து நியமித்துக் கொள்ளும்.

X
Dinamani
www.dinamani.com