ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரியான சுபேதாா் குல்தீப் சந்த் வீரமரணமடைந்தாா்.
இதுதொடா்பாக ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
அக்னூா் செக்டாரில் உள்ள கெரி பட்டல் பகுதியில் உள்ள காட்டில் ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்த மோதலில் ஹிமாசல பிரதேசத்தை சோ்ந்த ராணுவ அதிகாரியான சுபேதாா் குல்தீப் சந்த் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். கடுமையான துப்பாக்கிச்சூட்டை தொடா்ந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பிச் சென்றிருக்கக் கூடும் என கருதப்படுகிறது என்று தெரிவித்தனா்.
குல்தீப் சந்தின் உடலுக்கு ராணுவத்தினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து அவரின் உடல் இறுதிச் சடங்குக்காக ஹிமாசல பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு ஆகியோா் குல்தீப் சந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.
2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சத்ரி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவா் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
அங்கு தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் 2 பயங்கரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்கள் இருவரும் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு கொண்டவா்கள் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.