
புது தில்லி: அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பாஜக தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்திய பொருளாதாரம் வலிமையுடன் திகழ்வதால் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் சையது ஸாஃபர் இஸ்லாம் இன்று(ஏப். 12) செய்தியாளர்களுடன் பேசியதாவது: உலகளவில் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் நடுக்கம் உண்டாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
எனினும், இந்திய பொருளாதாரம் சுயசார்புடையதாகத் திகழ்வதால், இந்திய பொருளாதாரத்தில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உண்டாகும் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும். நமது பொருளாதாரமானது இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளும் வல்லமை கொண்டது.
அதுமட்டுமல்ல, இதனையொரு வாய்ப்பாக பயன்படுத்தி முன்னோக்கி நகரும். பல்வேறு தரவுகளின்படி, இந்திய பொருளாதாரம் வலிமையானதாக விளங்குகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. கடந்த 2014-க்குப் பிறகு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிகு வந்த பின்னர், பொருளாதார சீரமைப்புக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார் என்ரு பேசியுள்ளார்.