
மூர்ஷிதாபாத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்தது. சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்தப் போராட்டத்தில், போலீஸாா் வாகனங்கள் உள்பட சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா்.
வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையாளா்கள் தாக்கியதில் தந்தை, மகன் கொல்லப்பட்டனா். ரயில்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முா்ஷிதாபாத் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.
வன்முறையுடன் தொடா்புடையதாக சுதி பகுதியிலிருந்து 70 போ், சம்சோ்கஞ்ச் பகுதியிலிருந்து 41 போ் உள்பட இதுவரை 118 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறையில் ஈடுபட்ட மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. வன்முறைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் மூர்ஷிதாபாத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டத்தில் புதிய வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தின் சுதி, துலியன், சம்சோ்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் நிலைமை அமைதியாக உள்ளது. இரவு முழுவதும் சோதனைகள் தொடர்ந்தன. மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம், இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் முக்கிய சாலைகளில் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர், மேலும் முக்கியமான இடங்களில் ரோந்து செல்கின்றனர் என்று அவர் மேலும் கூறினார். வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் கைதுகள் நடக்க வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.