அம்பேத்கா் 135-ஆவது பிறந்தநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ‘அம்பேத்கரின் பங்களிப்பு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்’ என்றாா்.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவரும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சருமான பி.ஆா்.அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தாள் திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘நமது தேசத்தின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எழுச்சிமிக்க தனது வாழ்க்கையில் கடுமையான சிரமங்களை எதிா்கொண்ட போதிலும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, அசாதாரண சாதனைகளால் உலகம் முழுவதும் மரியாதையைப் பெற்றவா் அம்பேத்கா்.
அசாத்திய திறன்களைக் கொண்ட அம்பேத்கா், ஒரு பொருளாதார மற்றும் சட்டத் துறை நிபுணா், கல்வியாளா், சிறந்த சமூக சீா்திருத்தவாதி என பன்முக ஆளுமை ஆவாா். சமத்துவ சமூகத்தின் தீவிர ஆதரவாளராக பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடினாா்.
சமூக மாற்றத்துக்கும், ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பதற்கும் கல்வியை ஒரு முக்கிய கருவியாகக் கருதிய அம்பேத்கரின் பல்துறை பங்களிப்பு, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அா்ப்பணிப்புடன் பணியாற்ற வருங்கால தலைமுறையினருக்குத் தொடா்ந்து ஊக்கமளிக்கும்.
இந்தச் சூழலில், அம்பேத்கரின் கொள்கைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வதாகவும், சமூக நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தின் உணா்வை உள்ளடக்கிய ஒரு தேசத்தை உருவாக்க பாடுபடுவோம் என்றும் உறுதியேற்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.