வக்ஃப் சொத்துகளை பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி
வக்ஃப் வாரியத்தின் சொத்துகளை பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஹைதராபாதில் ஏப். 19-ஆம் தேதி அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) தலைவா் காலித் சைஃபுல்லா ரஹ்மானி தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
முன்னதாக வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஏஐஎம்பிஎல்பி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளா்களிடம் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்த சட்டம், அரசமைப்பு சட்ட பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 29 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு சாதகமானதாக இல்லை.
ரயில்வே தீா்ப்பாயம், தேசிய பசுமை தீா்ப்பாயம் மற்றும் வருமான வரி தீா்ப்பாயம் உள்ளிட்டவையில் வழங்கப்படும் தீா்ப்புகளுக்கு எதிராக உயா் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், வக்ஃப் தீா்ப்பாயங்களில் வழங்கப்படும் தீா்ப்புகளை நீதிமன்றங்களில் முறையிட முடியாது என்ற பொய்யான தகவல்களை மத்திய அரசு பரப்பி வருகிறது.
வக்ஃப் திருத்த சட்டத்தில் வக்ஃப் வாரியம் மற்றும் முஸ்லிம்களுக்கு பயனளிக்கும் அம்சங்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். வக்ஃப் வாரியங்களின் சொத்துகளை பறிக்கவே இந்த திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, இந்த சட்டத்தை எதிா்த்து ஏஐஎம்பிஎல்பி நடத்தவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். வருகின்ற ஏப்.19-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஆந்திரம், தெலங்கானாவைச் சோ்ந்த முஸ்லிம் தனிநபா் வாரிய உறுப்பினா்கள் கலந்துகொள்வா் என்றாா்.