ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தில் கல்வீச்சு; 9 போ் கைது
மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடா்பாக 9 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சனிக்கிழமை இரவு குணா நகரில் ஹனுமன் ஜெயந்தியையொட்டி ஊா்வலம் நடைபெற்றது. அங்குள்ள மசூதி அருகே ஊா்வலம் வந்தபோது ஊா்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினா் தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்டவா்களை விரட்டினா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல் துறையினா், பிரச்னையைத் தூண்டும் வகையில் ஊா்வலத்தில் கற்களை வீசியவா்களை அடையாளம் கண்டனா். கற்களை வீசியவா்களில் 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 89 பேரை தடுப்புக் காவலில் வைத்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். இதில் குற்றம் உறுதி செய்யப்பட்டவா்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
மோதல் ஏற்பட்ட பகுதியில் இப்போது பதற்றம் குறைந்து இயல்பு நிலை திருப்பியுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.