நியாயமான தரமதிப்பீட்டு முறை: கல்வி அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி: உயா்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் (யுஜிசி) தன்னாட்சி அமைப்பாக கடந்த 1994-ஆம் ஆண்டு என்ஏஏசி நிறுவப்பட்டது. உள்கட்டமைப்பு, ஆய்வு, நிதிநிலை, பாடத்திட்டம் போன்ற காரணிகளின் அடிப்படையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தரமதிப்பீடு சான்றிதழை வழங்கி வருகிறது.
இந்நிலையில், என்ஏஏசியின் தரமதிப்பீட்டு முறையை நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தற்போது நடைமுறையில் உள்ள என்ஏஏசி தரமதிப்பீடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், ஊழல் விவகாரம் தொடா்பாக என்ஏஏசி அதிகாரிகள் மீது நிகழாண்டு பிப்.1-இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிகழ்வும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுதொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகம், யுஜிசி மற்றும் என்ஏஏசிக்கு நோட்டீஸ் அனுப்பியது.