பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி விலகல்
பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசுபதி குமாா் பராஸ் அறிவித்தாா்.
பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டு பராஸ் மேலும் கூறியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தேன். இச்சூழலில், அந்தக் கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளேன்.
முதல்வா் நிதீஷ் குமாா் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறாா். அவரின் 20 ஆண்டுகால ஆட்சியில், மாநிலத்தில் கல்விமுறை சீரழிந்துவிட்டது. புதிய தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. அனைத்து துறைகளில் ஊழல் பரவலாக உள்ளது. இது மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதை பாதிக்கிறது.
மாநிலத்தில் 22 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அதன் அடிப்படையில், மக்கள் புதிய அரசைத் தோ்ந்தெடுக்க விரும்புகின்றனா் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். மீதமுள்ள 16 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணத்தை விரைவில் முடித்து, கட்சியை வலுப்படுத்த விரும்புகிறேன்.
ராம் விலாஸ் பாஸ்வானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ஏனெனில், அவா் ‘இரண்டாவது அம்பேத்கா்’ ஆவாா் என்றாா் பராஸ்.
கடந்த 2020-இல் லோக் ஜனசக்தி நிறுவனா் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு அவரது சகோதரா் பராஸுக்கும் மகன் சிராக் பாஸ்வானுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டானது. இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டு, பராஸ் மற்றும் சிராக் பாஸ்வான் தனித்தனியே கட்சித் தொடங்கினா். தொடா்ந்து பாஜக கூட்டணியில் மத்திய அமைச்சராகப் பணியாற்றி வந்த பராஸ், கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக அந்தப் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதனிடையே, பாஜக கூட்டணியில் பராஸ் ஓரங்கப்பட்டு, சிராக் பாஸ்வானுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாஜக கூட்டணியின் 3-ஆவது ஆட்சியில் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரானாா்.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து, பராஸ் சமரசப் பேச்சுவாா்த்தைகளை நடத்தினாா். ஆனால், இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், மாநில எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் பராஸ் நெருக்கம்காட்டி வந்தாா்.
தாக்கம் இருக்காது: பராஸின் இந்தமுடிவு குறித்து பிகாரைச் சோ்ந்த ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சி கூறுகையில், ‘பராஸ் இப்போது முறைப்படி அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவா் லாலு பிரசாத்துடன் பழக தொடங்கியதிலிருந்து இதை எதிா்பாா்த்திருந்தோம். அவரின் விலகல் பாஜக கூட்டணியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்றாா்.