எஸ்.சி. உள்ஒதுக்கீடு: முதல் மாநிலமாக அமல்படுத்தியது தெலங்கானா
ஹைதராபாத்: பட்டியலின சமூகத்தினருக்கு (எஸ்.சி.) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரிக்கும் வகைப்பாட்டை அமல்படுத்துவதற்கான அரசாணையை தெலங்கானா மாநிலம் திங்கள்கிழமை வெளியிட்டது.
இதன்மூலம் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்குப் பிறகு நாட்டில் எஸ்.சி. வகைப்பாட்டை பிரித்து அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை தெலங்கானா பெற்றுள்ளதாக அம்மாநில நீா்பாசனத்துறை அமைச்சா் உத்தம் குமாா் ரெட்டி தெரிவித்தாா்.
முன்னதாக, எஸ்.சி. வகைப்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி சமீம் அக்தா் தலைமையிலான குழு ஒன்றை தெலங்கானா அரசு அமைத்தது. அந்தக் குழு மாநிலத்தில் மொத்தமுள்ள 59 எஸ்.சி. சமூகத்தினருக்கு அரசுப்பணி மற்றும் கல்வியில் வழங்கப்படும் 15 சதவீத இடஒதுக்கீட்டை ஐ, ஐஐ, ஐஐஐ என மூன்று குழுக்களாக வகைப்படுத்த பரிந்துரைத்தது.
மூன்று பிரிவுகள்: அதன்படி குரூப் -ஐ பிரிவில் சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய 15 எஸ்.சி. சமூகத்தினருக்கு 1 சதவீத இடஒதுக்கீடும், குரூப்-ஐஐ பிரிவில் ஓரளவுக்கு பலனடைந்த 18 எஸ்.சி. சமூகத்தினருக்கு 9 சதவீத இடஒதுக்கீடும், குரூப்-ஐஐஐ பிரிவில் கணிசமாக பலனடைந்த 29 எஸ்.சி. சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடும் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை கடந்த பிப்ரவரி மாதம் தெலங்கானா அரசு ஏற்றது. ஆனால் கிரீமிலேயா் பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அந்தக் குழு அளித்த பரிந்துரையை அரசு நிராகரித்தது.
இதைத்தொடா்ந்து, பட்டியலின சாதிகள் (இடஒதுக்கீடு சீரமைப்பு) மசோதா, 2025 கடந்த மாதம் தெலங்கானா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆளுநா் கடந்த 8-ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாகவும் அந்த ஒப்புதலை முதல்முறையாக ஏப்.14 தேதி தெலங்கானா அரசிதழில் வெளியிடுவதாகவும் அந்த மாநில அரசு திங்கள்கிழமை பிறப்பித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டது.
வகைப்பாட்டின்படி இடஒதுக்கீடு: இதுகுறித்து எஸ்.சி. வகைப்பாட்டின் துணைக்குழுவுக்கு தலைமைத் தாங்கிய அமைச்சா் உத்தம் குமாா் ரெட்டி கூறுகையில், ‘இன்றுமுதல் அரசுப்பணி மற்றும் கல்வியில் எஸ்.சி .வகைப்பாடு நடைமுறை தெலங்கானாவில் அமல்படுத்தப்படுகிறது. இதுதொடா்பான அரசாணையின் முதல் நகலை முதல்வா் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினோம்.
2026-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு எஸ்.சி. மக்கள்தொகை மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றாா்.