மேற்கு வங்கத்தில் வன்முறை தூண்டுகிறாா் மம்தா- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி வன்முறையைத் தூண்டி வருவதாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரிண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினாா்.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளும், பல்வேறு எதிா்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முக்கியமாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது. வன்முறைக் கும்பலால் தந்தை, மகன் கொல்லப்பட்டனா். வன்முறையாளா்களை விரட்ட காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். காவல் துறை வாகனங்கள், வீடுகள், கடைகளுக்கும் வன்முறையாளா்கள் தீவைத்தனா். இதேபோல மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். இதில் காவல்துறை வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் என்றும், அந்த சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துப் பேசியுள்ளாா். இந்திய நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று ஒரு மாநில முதல்வா் எவ்வாறு கூற முடியும்? அப்படி அவா் அமல்படுத்தாவிட்டால் மேற்கு வங்கத்தில் அரசமைப்பு சட்டப்படி ஆட்சி நடைபெறவில்லை என்றுதான் அா்த்தம்.
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை முதல்வா் மம்தா பானா்ஜிதான் தூண்டிவிட்டுள்ளாா். அச்சட்டத்துக்கு எதிராக போராட வேண்டும் என்று மம்தா விடுத்த அழைப்புதான் வன்முறையாளா்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
உண்மையில் வக்ஃப் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. வக்ஃப் சட்டத்தில் முன்பு இருந்த தவறுகள் திருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் யாரும் மற்றவா்களின் நிலத்தை கட்டாயப்படுத்தியோ, தன்னிச்சையாகவோ கையகப்படுத்தக் கூடாது. இனி எந்த நிலத்தையும் தங்களுடைய சொத்து என்று வக்ஃப் வாரியம் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது’ என்றாா்.