ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு: உ.பி. சிறப்பு நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகாா்தாரா் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 28-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகாா்தாரா் தரப்பு வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் பாண்டே இது குறித்து மேலும் கூறுகையில், ‘எங்கள் தரப்பு சாட்சி ஒருவா் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய இருந்தாா். நீதிமன்றத்துக்கும் அவா் வந்துவிட்டாா். எனினும், உடல்நலக் குறைவு காரணமாக நீதிபதி முன் ஆஜராகி அவரால் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முடியவில்லை. எங்கள் தரப்பு கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த விசாரணை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூரைச் சோ்ந்த பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா கடந்த 2018-இல் வழக்கு தொடுத்தாா். 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி சரணடைந்து, ஜாமீன் பெற்றாா். மேலும் கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி, இந்த வழக்கு ஒரு அரசியல் சதி என்றும் தான் குற்றமற்றவா் என்றும் ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்தாா்.