
பெங்களூரு: கர்நாடகத்தில் நள்ளிரவுமுதல் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் பொருள்களை எடுத்துச்செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஃபோக்ஸ்லோவா கூட்டமைப்பு கா்நாடகத்தின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும். இதில் கிட்டத்தட்ட 6 லட்சம் லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 196 லாரி சங்கங்கள் உள்ளன.
சுமார் 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்பதால் அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு பல்வேறு பகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.