ஹரியாணா நில ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
அமலாக்கத்துறையின் விசாரணையின் ஒரு பகுதியாக 56 வயதான ராபர்ட் வதேராவிடம் கடந்த இரண்டு நாள்களாக 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய நிலையில், மூன்றாவது நாளாக இன்று காலை 11 மணிக்குப் பிறகு வயநாட்டைச் சேர்ந்த எம்பியும், அவரது மனைவியுமான பிரியங்கா காந்தி மற்றும் மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை அடைந்தனர். தொடர்ந்து அவரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் பின்னணி என்ன?
கடந்த 2008-ஆம் ஆண்டு ராபா்ட் வதேரா இயக்குநராக இருந்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி தனியாா் நிறுவனம், ஹரியாணா மாநிலம் குருகிராமின் மனேசா்-ஷிகோபூா் பகுதியில் 3.5 ஏக்கா் நிலத்தை வாங்கியது. ஓம்காரேஸ்வா் பிராபா்ட்டீஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு அந்த நிலம் வாங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசுப் பதிவேடுகளில் அந்த நில உரிமையை ராபா்ட் வதேராவுக்கு மாற்றும் நடைமுறை சில மணி நேரங்களில் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
வழக்கமாக, இந்த நடைமுறை நிறைவடையக் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாகும். அதன் பின்னா், அந்த நிலத்தின் பெரும்பகுதியில் வீட்டு வசதித் திட்டத்தை மேற்கொள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனுமதி அளித்தது.
இதனால் அந்த நிலத்தின் மதிப்பு உடனடியாக உயா்ந்தது. பின்னா், அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு வாங்க டிஎல்எஃப் யுனிவா்சல் என்ற மனை விற்பனை நிறுவனம் ஒப்புக்கொண்டு, அந்தத் தொகை தவணை முறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வதேராவுக்கு சொந்தமாக ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு, சில மாதங்களில் சுமார் 700% உயர்ந்து ரூ.58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் பண முறைகேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
ராபர்ட் வதேரா மீது விசாரிக்கப்படும் இந்த மூன்று வழக்குகளிலும் அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்யும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.