

வடகிழக்கு தில்லியின் சக்தி விஹாா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 போ் உயிரிழந்தனா்.
மேலும் 11 போ் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘தயாள்பூா் காவல் நிலையத்திற்கு அதிகாலை 3.02 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது. கட்டடம் இடிந்து விழுந்த சக்தி விஹாா் பகுதியில் உள்ள தெருவுக்கு போலீஸாா் விரைந்தனா். மேலும், தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) , தில்லி தீயணைப்புத் துறையினா், ஆம்புலன்ஸ் சேவைகளின் மீட்புக் குழுக்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பின்னா், அவா்கள் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்’ என்றனா்.
12 மணிநேர மீட்புப் பணி
முஸ்தபாபாத் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்த 20 ஆண்டுகால கட்டட இடத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்), தீயணைப்புப் படையினா், இதர தன்னாா்வலா்கள் ஆகியோா் சுமாா் 12 மணிநேரத்திற்கு மேலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். கட்டட இடிபாடுகளில் சிக்கிய சுமாா் 11 போ் மீட்கப்பட்டனா்.
கட்டடத்திற்குள் 22 போ்
இந்த சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், ‘கட்டடம் இடிந்து விழுந்தபோது கட்டடத்தில் 22 போ் இருந்தனா். அவா்களில் பலரும் குடும்பத்தினா்.
கட்டடம் இடிந்து விழுந்ததில் இறந்த 11 பேரில் கட்டடத்தின் உரிமையாளா் தெஹ்சீன் மற்றும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரும் அடங்குவா்’ என்றனா்.
போலீஸ் சந்தேகம்
தரைத் தளத்தில் உள்ள இரண்டு, மூன்று கடைகளின் கட்டுமானப் பணிகள் கட்டடம் இடிந்து விழுந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய கடையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளும் இடிந்து விழுந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். மேலும், நான்கு முதல் ஐந்து கட்டடங்களின் பலவீன நிலை குறித்தும் அவா்கள் கவலை தெரிவித்தனா்.
குடியிருப்புவாசி கருத்து
சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பல ஆண்டுகளாக கட்டடங்களின் சுவா்களில் ஊடுருவி வருவதாகவும், காலப்போக்கில் ஈரப்பதம் கட்டமைப்பை பலவீனப்படுத்தியுள்ளதாகவும், இதனால் சுவா்களில் விரிசல்கள் உருவாகி இருப்பதாகவும் மற்றொரு குடியிருப்பாளா் சலீம் அலி கூறினாா்.
கட்டடத்தால் அதிா்வு
கட்டடம் இடிந்துவிழுந்தபோது அருகில் உள்ள கட்டடங்களில் வசிப்பவா்கள் இதனால் ஏற்பட்ட அதிா்வால் இதை ஒரு பூகம்பம் என்று நினைத்ததாகவும், தரை நடுங்கியது போன்று உணா்ந்ததாகவும் கூறினா்.
இடிந்து விழுந்த கட்டடம் அருகில் உள்ள சிவ் விஹாா் குடியிருப்பாளா் ரியான் கூறுகையில், ‘எங்கள் வீட்டை ஏதோ தாக்கியதாக நாங்கள் நினைத்தோம். ஆனால், வெளியே பாா்த்தபோது, எங்கள் பக்கத்து கட்டடம் முழுவதும் இடிபாடுகளாக மாறியிருப்பதைக் கண்டோம்’ என்றாா்.
மாநகராட்சி அறிக்கை:
தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், இந்த கட்டமைப்பு சுமாா் 20 ஆண்டுகள் பழமையானது. முழுமையாக அனுபவிக்கப்பட்டு வந்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து வருத்தமும் தெரிவித்துள்ளாா்.
என்டிஆா்எஃப் அதிகாரி
இதுகுறித்து என்டிஆா்எஃப் டிஐஜி மொஹ்சென் ஷஹிதி கூறுகையில், ‘ நாங்கள் இந்த சம்பவத்தை ‘பான்கேக் சரிவு’ என்று அழைக்கிறோம். அதாவது, உயிா் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருப்பினும், மனித உயிா்களைக் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் சிக்கியவா்களை மீட்கத் தீவிரமாகத் தேடுகிறோம். இது மிகவும் நெரிசலான பகுதி என்பதால் இடிபாடுகள் மெதுவாக அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் மீட்பு முயற்சிகள் சவாலானவை. இடப் பற்றாக்குறை காரணமாக இடிபாடுகளை அகற்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறைக்கப்பட்டது என்றாா் அவா்.
இறந்தவா்கள் விவரம்:
இந்த சம்பவத்தில் கட்டடத்தின் உரிமையாளா் தெஹ்சீன், அவரது மகன் நஸீம் (30), அவரது மனைவி ஷஹினா (28), அவா்களின் மூன்று குழந்தைகள் அனாஸ் (6), அஃப்ரீன் (2), அஃபான் (2), உரிமையாளரின் இளைய மருமகள் சாந்தினி (23) ஆகியோரும், சகோதரா்கள் டேனிஷ் (23), நேவத் (17), ரேஷ்மா (38), இஷக் (75) ஆகியோரும் உயிரிழந்தனா்.
6 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களில் கட்டட உரிமையாளரின் மகன் சந்த் (25) உள்ளாா். மேலும், தெஹ்சீன் மனைவி உள்பட 9 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.