
அமலாக்கத் துறை நடவடிக்கைகளைக் கண்டு காங்கிரஸ் பயப்படாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறைகேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.
தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப். 25-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தில்லியில் இன்று(ஏப். 19) நடைபெற்றது. அதில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதற்கு எதிர்வினையாற்றினார்.
கார்கே பேசியதாவது: “பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பெயர்கள் ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் பெயரை அவர்கள் சேர்த்தாலும், நாங்கள் அஞ்சப் போவதில்லை” என்றார்.
வழக்கின் பின்புலம்: காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜா்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். யங் இந்தியா நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தலா 38 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவா் சுப்ரமணியன் சுவாமி கடந்த 2014-ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.
அதன் அடிப்படையில் கடந்த 2021-இல் விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறை அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் சொத்துகளை கடந்த 2023, நவம்பரில் இணைத்தது.
இந்த நிலையில், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் சொத்துகளை பணமுறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்திருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.