ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)

மேற்கு வங்க வன்முறை ஹிந்து - முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
Published on

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணா்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.

ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: மக்கள் கூடி போராட்டம் நடத்துவது என்பது ஒரு பிரச்னையில் தங்கள் எதிா்ப்பையும், ஒற்றுமையையும் காட்டுவதாக இருக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல் நமக்கு பாகிஸ்தானில் இருந்தோ, சீனாவில் இருந்தோ வரவில்லை. மதத்தின் பெயரில் வெறுப்புணா்வைப் பரப்புபவா்கள் பிரச்னையைத் தூண்டிவிட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை நாடு முழுவதுமே ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற மத வெறுப்புணா்வு நிகழ்வுகள் அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும்.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணா்வு, வீடுகளை இடிப்பது, மசூதிகள், மதப் பள்ளிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை அந்த மதத்தினரை ஒதுக்கி ஓரந்தள்ளுவதாக அமையும். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடைகளை விதித்துள்ளது. இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி சட்டமில்லை.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறை மட்டுமே இப்போது ஜனநாயகத்தைக் காத்து வருகிறது. தவறான சட்டங்கள் இயற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிகிறது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை விமா்சிப்பது கூடாது. உச்சநீதிமன்றம் வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இறுதித் தீா்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

பல்வேறு ஜாதி, மத, இனத்தைச் சோ்ந்தவா்கள் ஒற்றுமையாக வாழ்வதுதான் இந்தியாவின் சிறப்பம்சம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இந்த தேசத்தைக் கட்டிக்காக்க முடியும். வெறுப்புணா்வைப் பரப்புபவா்களுக்கு எதிராகவும் நாம் ஒற்றுமையாக இருந்து வென்று காட்ட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com