காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்

ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
தீவிரவாதத் தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்..
தீவிரவாதத் தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்..பிடிஐ
Published on
Updated on
2 min read

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, புல்வாமாவில் 47 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த தற்கொலைப் படை தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. புகழ்பெற்ற துலியன் ஏரிக்கு மலையேறிச் செல்லும் நபர்களுக்கான அடிவார முகாமான பைசாரனுக்கு, பெஹல்காமிலிருந்து நடந்தோ அல்லது குதிரை சவாரி மூலமாகவோ சென்றடைய முடியும்.

அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் "சிறிய ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்தபோது, பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர்.

தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தர பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும், பீதியடைந்த மக்கள் மறைவான இடத்தைத் தேடி சிதறி ஓடினர்.

"பரந்த, திறந்தவெளியில் மறைவதற்கு எங்களுக்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை' என்று இந்தத் தாக்குதலில் உயிர்தப்பிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கூறினார். சுற்றுலாப் பயணிகள் ஹிந்துக்கள் என்பதை உறுதிப்படுத்திய பிறகே பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் தாக்குதலில் கணவனை இழந்த பெண் தெரிவித்தார்.

தேடுதல் வேட்டை தொடக்கம்: தாக்குதல் குறித்த தகவலறிந்ததும், ராணுவம், சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஹெலிகாப்டர் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். உள்ளூர் மக்களும் காயமடைந்தவர்களில் சிலரை தங்கள் குதிரைகளில் ஏற்றி பஹல்காம் நகருக்கு அழைத்து வந்தனர். நிவாரணப் பணிகளில் முழு மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது.

பயங்கரவாதிகளைக் கண்டறிய தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு

இக்கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட "லஷ்கர்-ஏ-தொய்பா' பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.

பயங்கரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரில் எல்லை கடந்து, கோகர்நாக் வழியாக பைசாரனுக்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயம்

பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சந்துரு, பாலசந்திரா ஆகிய மூவர் உள்பட 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகர் விரைந்தார் அமித் ஷா

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீநகர் விரைந்தார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை அவர் நடத்தினார்.

தாக்குதல் நடந்த பெஹல்காமை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, "இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சமூக ஊடகப் பதிவில் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.

சவூதியிலிருந்து அவசரமாக நாடு திரும்புகிறார் மோடி

சவூதி அரேபிய பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்புவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இருநாள் பயணமாக சவூதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவர் காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு புதன்கிழமை இந்தியாவுக்கு திரும்புவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தத் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, "இக்கொடூர தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களின் தீய செயல்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் உறுதி அசைக்க முடியாதது. அது இன்னும் வலுவடையும்' என்றார்.

மிகப்பெரிய தாக்குதல்: முதல்வர் ஒமர் அப்துல்லா

தாக்குதல் குறித்து செய்தியறிந்து நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். சுற்றுலாப் பயணிகள் மீதான இத்தாக்குதல் அருவருப்பானது. இதில் ஈடுபட்டவர்கள் மனிதாபிமானமற்றவர்கள். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

உறுதியான நடவடிக்கை தேவை

பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் இறந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. அரசு இதற்கு பொறுப்பேற்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடைபெறாது. அப்பாவி இந்தியர்கள் இதுபோன்று தங்கள் உயிரை இழக்கமாட்டார்கள்.

அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இரங்கல்

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும், எனது மனைவியும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த சில நாள்களாக, இந்த நாட்டின் அழகையும், மக்களையும் கண்டு வியந்துள்ளோம். இந்த நேரத்தில் இக்கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com