

நமது நிருபர்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, அப்பகுதியை சேர்ந்த ஏ.ஜான் கென்னடி, பி.அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்புடைய விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போது செயல்படுத்தி வரும் மறுவாழ்வுத் திட்டம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவற்றுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அங்கு வசித்த குடும்பங்களில் 84 குடும்பங்கள் இன்னும் அந்தப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை விவகாரங்களைக் கருத்தில் கொள்ளும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். பல குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு சமத்துவபுரம் மாதிரி போன்று ஒரு திட்டத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வாதிட்டனர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், இந்த விவகாரத்தில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாஞ்சோலைப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக உள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மனுதாரர்களின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.