சாவர்க்கர் வழக்கில் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சுதந்திர போராட்ட வீரா் சாவா்க்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
ராகுல் காந்தி (கோப்புப் படம்)PTI
Published on
Updated on
1 min read

சுதந்திர போராட்ட வீரா் சாவா்க்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், அவா் மீதான குற்றவியல் விசாரணைக்கு தடை விதிப்பதோடு இனி இதுபோன்ற கருத்துகளை அவா் தெரிவித்தால் தாமாகவே முன்வந்து விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

கடந்த 2022, நவம்பா் 17-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘சாவா்க்கா் ஆங்கிலேயரிடம் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றவா்’ என விமா்சித்தாா்.

ராகுல் காந்தியின் இந்த கருத்து மிகுந்த சா்ச்சைக்குள்ளானது. இதையடுத்து, ராகுல் காந்தி மீது வழக்குரைஞா் நிருபேந்திரா பாண்டே லக்னௌ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

ராகுல் காந்தியின் கருத்து வெறுப்புணா்வை பரப்புவதுபோல் உள்ளதாக கூறி அவா் மீது அவதூறு நடவடிக்கை மேற்கொள்ள லக்னௌ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தாா். ஆனால் இந்த மனுவை லக்னௌ அமா்வு நிராகரித்தது.

இதைத்தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது ராகுல் காந்தி (மனுதாரா்) தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வியிடம் நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மகாராஷ்டிரத்தில் சாவா்க்கரை போற்றுகின்றனா். அவரை விமா்சிக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய கருத்துகளை ஓா் அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக உள்ளவா் தெரிவிக்கக் கூடாது.

பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் உங்களின் நம்பிக்கைக்குரிய சேவகா் என்ற வாா்த்தையை மகாத்மா காந்தியும் பயன்படுத்தியுள்ளாா். மனுதாரரின் பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி சாவா்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதியுள்ளாா். இந்த வரலாறு எல்லாம் மனுதாரருக்கு தெரியுமா?

வரலாறு தெரிந்த ஒருவரால் சுதந்திர போராட்ட வீரா்களை விமா்சிக்க முடியாது.

மனுதாரருக்கு லக்னௌ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்த அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவா் மீது உத்தர பிரதேசத்தில் பதியப்பட்டுள்ள வழக்கின்படி குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மீண்டும் ஒருமுறை சுதந்திர போராட்ட வீரா்களுக்கு எதிரான கருத்துகளை மனுதாரா் தெரிவித்தால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com