பஹல்காம் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வைரலான செய்யறிவு(ஏஐ) புகைப்படங்கள்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சில புகைப்படங்கள் பற்றி...
பஹல்காம் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வைரலான செய்யறிவு(ஏஐ) புகைப்படங்கள்!
Updated on
2 min read

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சில புகைப்படங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப். 22 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல சம்பவம் நடைபெற்ற இடத்தில், புல்வெளியில் பனிமூட்டத்தின் நடுவே இறந்தவர்கள் கிடப்பது போன்ற ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.

செய்யறிவு புகைப்படம்
செய்யறிவு புகைப்படம்

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் மற்றும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பலரும், இந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டனர்.

இந்நிலையில் அந்த புகைப்படங்கள் 'செய்யறிவு புகைப்படங்கள்' (AI generated Images) என்று 'அல்ட் நியூஸ்', 'நியூஸ் மீட்டர்' உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சரிபார்ப்பில் அவை செய்யறிவு புகைப்படங்கள் என உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

செய்யறிவு புகைப்படம்
செய்யறிவு புகைப்படம்

பஹல்காம் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா்.

அதைத்தொடர்ந்து மறுநாள் பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதேபோல சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்குத் தடை என பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்ததால் இருத்தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும், பயங்கரவாதிகள் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com