கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்Center-Center-Delhi

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடைமுறைக்கு வந்தது.
Published on

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, புதிய தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் குறைபாடுகளை தமிழக அரசு எடுத்துக் கூறி திருத்தங்கள் சொல்லி, மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை ஏற்க மறுத்து, எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், தில்லி பல்கலையோ, இன்று கல்விக் கொள்கையின் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு அதிலிருக்கும் துயரங்கள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறது.

மாணவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்பறைகளில் எப்படி உட்கார முடியும்? பேராசிரியர்கள் எத்தனை மணி நேரம் பாடம் எடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் கீழ் 4வது ஆண்டு இளங்கலைப் படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் நடைமுறைப்படுத்தியபோது, கல்லூரிகள் தினமும் 12 மணி நேரம் செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய புதிய நடைமுறையானது, மாணவர்களையும் பேராசிரியர்களையும் அதிகம் சோர்வடையச் செய்யும் என்றும், அடிப்படை விஷயங்களைப் புறக்கணித்து ஏற்படுத்தப்பட்டிருப்பதகாவும் பரவலாகக் கருத்துகள் எழுந்துள்ளன.

ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரிகள் தொடங்கும் நிலையில், ஜூலை 31, 2025 தேதியிட்ட பல்கலைக்கழக அறிவிப்பில், அனைத்து கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் அதன் மனித வளத்தையும், உள்கட்டமைப்பையும் உகந்த முறையில் பயன்படுத்துவதற்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பாடச் சுமை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஈடுகட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருப்பது, கல்வியாளர்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கடும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தில்லி பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரியின் பேராசிரியர், நாம் கல்லூரிகளை தொழிற்சாலைகளாக மாற்றுகிறோமா?" என்று கேட்கிறார். மாணவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம், வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாள்கள் வகுப்பறையில் அமர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக பயண நேரம், பாடங்களுக்குத் தேவையான மற்ற ஏற்பாடுகள், மனநலனுக்கு எதிராக இந்த நடைமுறை இருப்பதாகக் கூறுகிறார்கள்.

12 மணி நேர பணி நேரம் என்ற நடைமுறை, இத்தனை மணி நேரத்துக்கும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இருப்பார்களா?என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஒருபக்கம் பல்கலைக்கழக நிர்வாகக் குழு, ஊழியர்களை தொடர்ச்சியாகப் பணியமர்த்த பரிந்துரைப்பதோடு, அப்படியும் பாட இடைவெளிகளை நிரப்ப விருந்தினர் ஆசிரியர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினாலும், இவை அனைத்துமே, கல்வி கற்பித்தல் தரத்தையே சமரசம் செய்து கொள்ளும் வகையில்தான் அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, திடீரென ஏற்படுத்தப்பட்ட 12 மணி நேர வகுப்புகளை சரி செய்ய, உதவிப் பேராசிரியர்கள் வாரத்துக்கு 16 மணி நேரமும், இணைப் பேராசிரியர்கள் 14 மணி நேரமும் வகுப்பறையில் பாடம் எடுக்க வேண்டும்ட என்றும் யுஜிசியின் ஒழுங்குமுறை 2018-இன் பிரிவு 15-ஐயும் இந்த தேசிய கல்விக் கொள்கை நடைமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது.

தில்லி பல்கலை எதிர்கொள்ளும் சிக்கல்கள்

நான்காம் ஆண்டு இளங்கலைப் படிப்பு 12 மணி நேரம் செயல்படும்.

கல்லூரி வகுப்புகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

இந்த புதிய நடைமுறைச் சிக்கல் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கான அறிவிப்பு ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மனநலம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

போதிய பேராசிரியர்கள் கிடைப்பது சிக்கல்

உதவிப் பேராசிரியர்கள் வாரத்திற்கு 16 மணிநேரம் பணி நேரம்

இணைப் பேராசிரியர்/பேராசிரியர் 14 மணிநேர பணி நேரம்

நான்காம் ஆண்டு என்பதால், தற்காலிக பேராசிரியர்கள் கற்பிக்க அனுமதி இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் இருந்த குளறுபடிகள் குறித்து தமிழகம் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், புது தில்லி உள்ளிட்டவை, நடைமுறைக்கு வரும் வரை எதிர்ப்புக் காட்டாமல், நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகுதான் கவலை தெரிவிப்பது என்பது கல்வியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

The new National Education Policy, which requires colleges to conduct 12-hour classes for fourth-year undergraduate students, has sparked a major controversy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com