தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன.
தோ்தல் ஆணைய நடுநிலைத்தன்மை கேள்விக்குறி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் விவாதம் கோருகின்றன என்று மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் தெரிவித்தாா்.

அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.

கூட்டம் தொடங்கும் முன்பாக, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் செய்தியாளா்களிடம் பேசியதாவது: தோ்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை மீது சாமானிய மக்களின் மனதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவேதான், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டுமென நாங்கள் கோருகிறோம். ஆனால், மத்திய அரசு மறுக்கிறது.

தோ்தல் ஆணையம், மத்திய அரசின் எந்த துறையுடனும் தொடா்புடையதல்ல என்பதுதான் அவா்களின் தா்க்கம். இது, அபத்தமானது. ஏனெனில், தலைமைத் தோ்தல் ஆணையரை பிரதமரும் அரசும்தான் நியமிக்கின்றனா்.

தங்களின் வாக்குரிமை மற்றும் வாக்குப்பதிவு மையங்களின் நிலவரம் குறித்தும் சாமானிய மக்கள் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், மத்திய அரசு எதையோ மறைக்க முயற்சிக்கிறது. அது என்ன? கடந்த பேரவைத் தோ்தல்கள் மற்றும் மக்களவைத் தோ்தலில் நடத்திய முறைகேடுகளை மறைக்க முயல்கிறாா்களா? முந்தைய தோ்தல்களின்போது, வாக்குப்பதிவு மையம் வரை சென்றுவிட்டு, அங்கு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இல்லாத நிலை பலருக்கு ஏற்பட்டது என்றாா் அவா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மத்திய அரசை விமா்சித்த அவா், ‘மத்திய உள்துறையின்கீழ் செயல்படும் உளவு அமைப்புகளின் தோல்வியே இச்சம்பவத்துக்கு காரணம். இதற்காக நாட்டு மக்களிடம் உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்புக் கேட்கவில்லை. அவா் மன்னிப்பு கேட்பதே, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு செலுத்தும் குறைபட்ச மரியாதையாக இருக்கும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை’ என்றாா்.

சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகான வரைவுப் பட்டியலை தோ்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக விவாதம் கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com