மேற்கு வங்கம்: எதிா்க்கட்சித் தலைவா் வாகனம் மீது திரிணமூல் கட்சியினா் தாக்குதல்
மேற்கு வங்கத்தில் பாஜகவைச் சோ்ந்த சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் வாகனம் மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினா்.
இந்த சம்பவத்தில் அவருடன் சென்ற போலீஸாா் வாகனத்தின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு எதிரே பாஜக சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சுவேந்து அதிகாரி சென்றாா். அப்போது சாலை கூடியிருந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் சிலா் திரிணமூல் காங்கிரஸ் கொடிகளையும் கையில் வைத்திருந்தனா்.
சுவேந்து அதிகாரியின் வாகன அணிவகுப்பு அந்த வழியாக கடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்த சிலா் அவரின் வாகனத்தை நோக்கில் காலணிகள் உள்ளிட்டவற்றை வீசினா். அப்போது அவருடைய வாகனத்துடன் காவலுக்குச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. சுவேந்து அதிகாரிக்கு எதிராக கோஷமும் எழுப்பப்பட்டது.
அண்மையில் கூச்பிகாா் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்குச் சென்ற எதிா்க்கட்சித் தலைவா் வாகனமும் தற்போது தாக்குதலுக்கு உள்ளானதுடன் போலீஸ் வாகனம் சேதமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை திரிணமூல் கட்சியினா் திட்டமிட்டு நடத்தியதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினா். இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.