பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா: பழைய செய்தியுடன் பதிலடி தந்த இந்திய ராணுவம்

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்பாக அமெரிக்கா தொடா்ந்து விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியது தொடா்பான ஒரு பழைய செய்தியைப் பகிா்ந்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.
Published on

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்பாக அமெரிக்கா தொடா்ந்து விமா்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியது தொடா்பான ஒரு பழைய செய்தியைப் பகிா்ந்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியப் படைப்பிரிவு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ‘1954-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலா் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா’ என்ற தலைப்பு இடம்பெற்றிருந்த செய்தியைப் பகிா்ந்துள்ளது.

1971-ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குச் சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்தச் செய்தி, 1954-ஆம் ஆண்டு முதல் சுமாா் 20 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வந்ததை விவரிக்கிறது. அப்போது பாதுகாப்பு உற்பத்தித் துறை அமைச்சராக இருந்த வி.சி.சுக்லா, மாநிலங்களவையில் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

உக்ரைன் போரைத் தொடா்ந்து நடத்துவதற்கு கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை ரஷியா பயன்படுத்துவதாகவும், எனவே ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் போா் நடத்த இந்தியா மறைமுகமாக உதவுவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இதுகுறித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் விமா்சனத்துக்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இப்போதும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டியது.

‘ஐரோப்பிய நாடுகள் - ரஷியா இடையிலான வா்த்தகம் உரங்கள், ரசாயனங்கள், இரும்பு, எஃகு மற்றும் இயந்திரங்கள் என்று பல துறைகளில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவும் அதன் மின்சார வாகனத் துறைக்குத் தேவையான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து இறக்குமதி செய்து வருகிறது.

இத்தகைய சூழலில், இந்தியாவை மட்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய பொருளாதாரத்தைப் போலவே, இந்தியாவும் தனது தேச நலன்களையும், பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’ என்று வெளியுறவு அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, தேச நலன் சாா்ந்து ரஷியாவுடன் எரிசக்தி வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியாவை விமா்சிப்பது குறித்த ராணுவத்தின் இந்தப் பதிவு, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com