
புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.
புனேவில் உள்ள சஹ்யாத்ரி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் எதிரில் உள்ள நடைபாதையில் ஒருவர் படுத்திருக்கிறார். தன்னுடைய சம்பளத்தை நிறுவனம் கொடுக்காமல் நிறுத்திவைத்திருப்பதால், கையில் பணமில்லாமல், தங்க வசதி இல்லாமல், நடைபாதையில் படுத்துக் கிடப்பதாக அவர் கைப்பட எழுதிய கடிதத்தை தன்னுடன் வைத்திருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், தன்னுடைய பெயர் சௌரவ் மோர், ஓரிரு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, ஜூலை 29ஆம் தேதி தான் மென்பொருள் நிறுவனத்துக்குள் நுழைந்தபோது, என்னுடைய அடையாள அட்டை வேலை செய்யவில்லை. உள்ளே நுழைய முடியவில்லை. பிறகு ஜூலை 30ஆம் தேதிதான் எச்ஆர், இது பற்றி என்னிடம் கூறினார். ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் வழங்கப்படும் என கூறினார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. என்னிடம் பணமில்லை, நடைபாதையில்தான் இருக்கிறேன் என்று எச்ஆரிடம் கூறினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மென்பொருள் நிறுவனங்கள் திடீரென ஒரு நாள் வேலையை விட்டு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், மென்பொருள் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. அறிவிப்பின்றி ஊழியர் விடுமுறையில் சென்றார். அந்த நாள்களில் அவருக்கான ஊதியம் பிடிக்கப்படும். அப்போது அவரது அடையாள அட்டை செயலற்றுப் போயிருக்கும். இப்போது மீண்டும் அவர் பணிக்கு வந்திருக்கிறார். அவரது பெயர் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை ஆக்டி்வ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபாதையில் இருப்பது குறித்து அறிந்து அவர் தங்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் தரப்பில் ஊழியரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஊழியரை நடைபாதையிலேயே விட்டுவிட மாட்டோம் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.