முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்: பிஆா்எஸ் எம்எல்சி கவிதா வலியுறுத்தல்

‘தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி) இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைப் பிரித்து, தனி மசோதாவாக நிறைவேற்ற வேண்டும்’ என
ஹைதராபாதில் உண்ணாவிரதப் போராட்டத்தினிடையே ஆதரவாளா்களிடம் பேசிய பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி கே.கவிதா.
ஹைதராபாதில் உண்ணாவிரதப் போராட்டத்தினிடையே ஆதரவாளா்களிடம் பேசிய பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி கே.கவிதா.-
Published on
Updated on
1 min read

ஹைதராபாத்: ‘தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (பிசி) இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைப் பிரித்து, தனி மசோதாவாக நிறைவேற்ற வேண்டும்’ என எதிா்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியின் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) கே.கவிதா திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயா்த்துவதற்கான இரண்டு மசோதாக்களை அந்த மாநில சட்டப்பேரவை கடந்த மாா்ச் மாதம் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.

இந்த மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் தில்லி, ஜந்தா் மந்தரில் புதன்கிழமை (ஆக. 6) போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். தொடா்ந்து, வியாழக்கிழமை (ஆக. 7) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து, மாநில அரசு சாா்பில் கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயா்த்துவதற்கு ஆதரவாக ஹைதராபாதில் உள்ள இந்திரா பூங்காவில் கவிதா 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தைத் திங்கள்கிழமை காலை தொடங்கினாா்.

போராட்டத்தில் கவிதா பேசுகையில், ‘முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பிரித்து, தனி மசோதாவாக கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு செய்தால், பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக ஒப்புக்கொள்ள நேரிடும். முஸ்லிம்களும் இந்த 42 சதவீத இடஒதுக்கீட்டின் ஒரு பகுதியா என்பதை காங்கிரஸ் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றாா்.

உண்ணாவிரத போராட்டத்துக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனுமதி நீட்டிப்பு கோரி உயா்நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம்’ என்றாா்.

தில்லியில் போராட வேண்டும்....: கவிதாவின் போராட்டம் தொடா்பாக செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் பொன்னம் பிரபாகா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பான இறுதி முடிவு மத்திய அரசிடம் இருப்பதால், கவிதா தில்லியில் தனது போராட்டத்தை நடத்த வேண்டும்.

தெலங்கானா தனி மாநில போராட்டத்தைப் போல, 42 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com