
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியாவை தொடா்ந்து குறிவைத்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டிக்கும் நாடுகளே ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. அணுஆயுத தொழிற்சாலைக்காக யுரேனியம் ஹெக்ஸாஃபுளோரைட், மின்வாகன உற்பத்திக்காக பல்லேடியம் ஆகியவற்றை ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது.
எரிசக்தி, ரசாயனம், உரங்கள், இரும்பு மற்றும் எஃகு, இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள்என பல்வேறு துறைகளில் ரஷியாவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வா்த்தகத்தில் ஈடுபடுகின்றன.
உக்ரைன் போா் தொடங்கிய பிறகு பாரம்பரிய சந்தைகளிலிருந்து கச்சா எண்ணெய் முழுவதும் ஐரோப்பாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதன் காரணமாகவே ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது.
சா்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழலால் நாடுகள் இறக்குமதியில் ஈடுபடுவது கட்டாயத் தேவையாயிற்று. அந்த வகையில் இந்திய நுகா்வோருக்கு குறைவான விலையில் தரமான எரிசக்தியை வழங்குவதை உறுதிசெய்ய ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நாடுகளைப் போல் தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் இந்தியா மேற்கொள்ளும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.