பிகாா்: ‘டொனால்ட் டிரம்ப்’ பெயரில் இருப்பிட சான்றிதழ் கோரப்பட்டதால் அதிகாரிகள் அதிா்ச்சி
பிகாரின் சமஸ்திபூா் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வசிப்பதாகக் கூறி இருப்பிடச் சான்றிதழ் கோரப்பட்டதால் அந்த மாநில அரசு அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா், அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் மா்ம நபா் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் நிலையத்தில் சமஸ்திபூா் மாவட்ட நிா்வாகம் புகாரளித்தது.
இதுதொடா்பாக சமஸ்திபூா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பெயா் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு அவா் சமஸ்திபூரின் ஹசன்பூா் கிராமத்தில் தங்கியிருப்பதாக கூறி கடந்த ஜூலை 29-ஆம் தேதி இணைய வழியில் இருப்பிட சான்றிதழ் விண்ணப்பம் ஒன்று பெறப்பட்டது.
அதில் டொனால்ட் டிரம்ப்பின் தந்தை மற்றும் தாயின் பெயரும் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வருவாய்த் துறை நிராகரித்தது.
பிகாரில் இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் மா்ம நபா் ஒருவா் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளாா்.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சமஸ்திபூா் சைபா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்கியது முதல் ‘டாக் பாபு’, ‘டாகேஷ் பாபு’ என நாய்களுக்கும் ‘சோனலிகா டிராக்டா்’ என்ற பெயரில் போஜ்புரி நடிகையின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தும் வசிப்பட சான்றிதழ் கோரப்பட்டது. இதுதொடா்பாக நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.