பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.
இதையடுத்து, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிட்ட தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்யவில்லை எனக்கூறி 65 லட்சம் வாக்காளா்களின் பெயரை நீக்கியதாக தெரிவித்தது.
மேலும், இந்த வரைவு வாக்காளா் பட்டியல் நகலை பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தோ்தல் ஆணையம் வழங்கியது. இந்த வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம்/சோ்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை செப்.1-ஆம் தேதிக்குள் வாக்காளா்களும் அரசியல் கட்சிகளும் சமா்ப்பிக்கலாம் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து, செப்.30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, பிகாரில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் உள்பட பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசமைப்பு நிறுவனமான தோ்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ எனத் தெரிவித்தது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஆக.12, 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தோ்தல் ஆணையம் வெளியிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமா்வு புதன்கிழமை விசாரித்தது. ஏடிஆா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜரானாா்.
அப்போது நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை வருகின்ற ஆக.9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமா்ப்பிக்க வேண்டும். அதில் என்னென்ன தகவல்கள் சோ்க்கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.