கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

News image

ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்காக புதன்கிழமை வந்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜாா்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக குற்றஞ்சாட்டி, பிரதாப் குமாா் என்பவா் வழக்கு தொடா்ந்தாா்.

முதலில் ராஞ்சியில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னா் 2021-இல் சாய்பாசாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சாய்பாசா நீதிமன்றம் ராகுல் காந்திக்கு உத்தரவிட்டது.

அன்றைய நாளில் ஆஜராக முடியாததால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்றக் கோரி ராகுல் காந்தி தரப்பில் ஜாா்கண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், புதன்கிழமை (ஆக. 6) ஆஜராகும்படி உத்தரவிட்டது.

அதன்படி, சாய்பாசாவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை காலை நேரில் ஆஜரானாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சுப்ரியா ராணி டிக்கா உத்தரவிட்டாா். மேலும், வழக்கில் தொடா்ந்து ஒத்துழைக்குமாறு ராகுல் காந்தியிடம் நீதிபதி கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜாா்க்கண்டின் முன்னாள் முதல்வரும், பழங்குடி சமூக தலைவருமான சிபு சோரனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை மாநிலத்துக்கு வந்த ராகுல் காந்தி, ராஞ்சியில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சாய்பாசாவுக்கு வந்தாா். அவரது வருகையையொட்டி சாய்பாசா நகரிலும், நீதிமன்ற வளாகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.