
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், உங்களைப் பாதங்களை கழுவவே கங்கை வெள்ளம் நேரிட்டதாக உத்தரப்பிரதேச அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கான்பூர் தேஹாத் பகுதியில் கடுமையான வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட உத்தரப்பிரதேச மீன்வளத் துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத், அங்கிருந்து ஒரு பெண்மணி, வெள்ளம் சூழ்ந்திருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தபோது, கங்கை நீர், உங்கள் பாதங்களைக் கழுவவே வந்திருப்பதாக ஆறுதல் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் துயரங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், இவ்வாறு பேசியிருப்பதற்கு, எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த விடியோவில், ஒரு பெண்மணி, வெள்ளத்தில் நின்று கொண்டிருக்கும்போது, அங்கே வரும் அமைச்சர், உங்களைப் தங்களை கழுவவே, உங்கள் வீட்டுக்கே கங்கை நீர் வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் நேரடியாக சொர்க்கத்துக்கே செல்வீர்கள் என்று கூறுகிறார்.
கடும் வெள்ளத்தால் வீடு உள்ளிட்டவற்றை இழந்து நிர்கதியாக நின்றிருந்த பெண்ணோ, அமைச்சரின் பேச்சைக் கேட்டு அதிருப்தியடைந்து, கங்கையின் ஆசிர்வாதங்களை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதும் அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது.
ஆனால், அவர் அந்த பதிலை நேரடியாக அமைச்சரிடமே சொல்கிறாரா அல்லது அருகில் இருந்த பெண்ணிடம் சொல்கிறாரா என்பது தெரியவில்லை.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிஷாத் கட்சியின் தலைவரான நிஷாத்தின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இது பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமைச்சர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டேன். அப்போது, வெள்ளம் சூழ்ந்துவிட்டதே என்ற கவலை தெரிவித்த மக்களிடம், எங்கெங்கோ இருந்து மக்கள் கங்கையில் புனித நீராக வருகிறார்கள். ஆனால், இங்கே கங்கையே உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது என்று கூறினேன் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.