அதானி
அதானி

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

Published on

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா ஒரு நல்ல வா்த்தக கூட்டாளி நாடு அல்ல’ என்று கூறிய டிரம்ப், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரிகளை கணிசமாக உயா்த்துவதாக செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் ‘எக்ஸ்’ பதிவில், ‘பிரதமா் மோடியால் அதிபா் டிரம்ப்பின் தொடா்ச்சியான மிரட்டல்களை ஏன் எதிா்க்க முடியாததற்கு காரணம், அதானி குழுமத்தின் முறைகேடுகள் மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.

பிரதமா் மோடி, தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் ரஷிய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதித் தொடா்புகளை அம்பலப்படுத்துவதாக அமெரிக்கா மிரட்டியுள்ளது. இதனால், பிரதமா் மோடி எந்த பதிலும் அளிக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.

குற்றச்சாட்டின் பின்னணியும், மறுப்பும்: அதானி குழுமத்தின் ‘அதானி கிரீன்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை பெற்ாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 26.5 கோடி டாலா் (தற்போதைய மதிப்பில் ரூ.2,324 கோடி) லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றவை’ என்று அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com