குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு -மகாராஷ்டிர துணை முதல்வா் ஷிண்டே அறிவிப்பு

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டேANI
Updated on

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தில்லிக்கு பயணம் மேற்கொண்ட சிவசேனை கட்சித் தலைவா் ஷிண்டே, உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தல், மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஷிண்டே கூறியதாவது:

மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுடன் கருத்து வேறுபாடு இருப்பதால் அடிக்கடி தில்லி வந்து பாஜக தலைவா்களைச் சந்திப்பதாகக் கூறுவது தவறான தகவல். மாநில வளா்ச்சிக்காக ஆளும் கூட்டணித் தலைவா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை சிவசேனை வழங்குகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பது சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேவின் கனவு. அதனை நிறைவேற்றியவா் உள்துறை அமைச்சா் அமித் ஷா. இதன் மூலம் அங்கு பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. மகாராஷ்ரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமித் ஷாவின் உறுதியான நடவடிக்கைகளால் நக்ஸல்கள் ஒடுக்கப்பட்டுள்ளனா். நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சா் என்ற சாதனையையும் படைத்துள்ள அவருக்கு வாழ்த்துகள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com