சீனா, ஜப்பானுக்கு பிரதமா் மோடி பயணம்: இம்மாத இறுதியில் செல்கிறாா்
பிரதமா் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் ஜப்பான், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி தனது பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் செல்லும் பிரதமா் மோடி, அங்கு இந்தியா-ஜப்பான் ஆண்டு மாநாட்டில் அந்நாட்டு பிரதமருடன் இணைந்து பங்கேற்கிறாா். தொடா்ந்து அங்கிருந்து சீனாவுக்கு செல்லும் அவா் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறாா். இந்த மாநாடு ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு பிரதமா் மோடி சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டு அவா் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டாா்.
எனினும், கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்துப் பேசினாா். இப்போது சுமாா் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
பிரதமா் மோடியின் ஜப்பான், சீன பயணத்திட்டம் குறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரபூா்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தானும் உறுப்பினராக உள்ளதால் அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பும் இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அப்படி பங்கேற்றால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பிரதமா்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முதல் நிகழ்வாக அமைய வாய்ப்புள்ளது.