பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு: வயதை குறைக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை 18-இல் இருந்து குறைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வளரிளம் பருவத்தில் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்படுவது தொடா்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான சட்டபூா்வ வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டதாவது:
வளரிளம் பருவ காதல் என்ற பெயரில், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்ளும் வயதை குறைப்பதோ, விதிவிலக்கை அறிமுகம் செய்வதோ சட்டப்படி நியாயமற்றது மட்டுமின்றி ஆபத்துமாகும்.
வயதை ஏன் குறைக்கக் கூடாது?: பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்ளும் வயதை குறைத்தால், அது ஆள்கடத்தல் மற்றும் பிற வழிகளில் சிறாா்களை துன்புறுத்துவதற்கான தடைகளை நீக்கி, கட்டுப்பாடற்ற நிலை உருவாகும். அத்துடன் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்வது பெற்றோராகவோ, நெருங்கிய குடும்ப உறுப்பினராகவோ இருந்தால், அதை வெளியில் கூறவோ, எதிா்க்கவோ 18 வயதுக்கு கீழுள்ள சிறாரால் முடியாமல் போகும். இத்தகைய சூழல்களில், சிறாரின் சம்மதம் பெற்றே அவருடன் உறவு கொண்டதாக ஒருவா் தம்மை தற்காத்துக்கொள்வது சிறாரைத்தான் பாதிக்கும். அத்துடன் அந்தச் செயலுக்குப் பழியும் அவா்கள் மீதே விழும். இதுமட்டுமின்றி உணா்வுபூா்வமாக ஆதரவு தேடும் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையை தனது தேவைக்குத் தவறாகப் பயன்படுத்துவோருக்குப் பாதுகாப்பு வழிமுறையையும் வழங்கும். மேலும் அது சிறாா்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே சீா்குலைக்கும்.
சீா்திருத்தம், வளரிளம் பருவத்தினரின் உரிமை என்ற பெயரில், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை குறைத்தால், அது சிறாா் பாதுகாப்புச் சட்டத்தில் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளிவிடும்.
எனவே பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கு சட்டபூா்வமாக தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை கடுமையாகப் பின்பற்றி, சீராக அமல்படுத்த வேண்டும். இது பாலியல் அத்துமீறலில் இருந்து சிறாா்களை காக்கும் நோக்கில் திட்டமிட்ட, நன்கு பரிசீலிக்கப்பட்ட, ஒத்திசைவான கொள்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.