ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் சாலையில் இருந்து விலகி, ஓடையில் கவிழ்ந்த சிஆா்பிஎஃப் வாகனம்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் சாலையில் இருந்து விலகி, ஓடையில் கவிழ்ந்த சிஆா்பிஎஃப் வாகனம்.

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா்.
Published on

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா்.

உதம்பூா் மாவட்டத்தின் கத்வா பகுதியில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது.

சிஆா்பிஎஃப்-இன் 187-ஆவது படையணியைச் சோ்ந்த 23 வீரா்கள், வசந்த்கா் பகுதியில் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு, கனரக வாகனத்தில் தங்கள் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஓடையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைத் தொடா்ந்து, மீட்புக் குழுவினருடன் உள்ளூா் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில், இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 5 போ் மட்டும் காயமின்றி உயிா்தப்பினா்.

விபத்தில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மனோஜ் சின்ஹா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா்கள் நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவை, என்றென்றும் நினைவுகூரப்படும். அவா்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். அவா்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான உதவியை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com