
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக் குறைவு உள்ளிட்ட மருத்துவக் காரணங்களால் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், அந்தப் பதவியை காலியானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (ஆகஸ்ட் 7) வெளியிட்டது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி. நட்டாவுக்கு வழங்குவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைவரும் ஒருமனதாக ஏற்றக்கொண்டனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் இறுதி செய்வார்கள் என்றும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிவசேனைத் தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, மிலிந்த் தியோரா, பிரபுல் படேல், சிராக் பாஸ்வான், உபேந்திர குஷ்வாஹா, ராம் மோகன், லல்லான் சிங், அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல், ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.