வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம் என்றும் வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
1 min read

தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் செய்து, தேர்தல் ஆணையமே வாக்குகளில் மோசடி செய்து வருவதாக தொடர்ந்து ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்த நிலையில், அது தொடர்பான ஆதாரங்களுடன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவினர் கூறி வந்ததுபோல, அணுகுண்டை வீசியிருக்கிறார்.

மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெற வெறும் 25 தொகுதிகள்தான் தேவைப்பட்டன. அதற்கேற்ப, 25 தொகுதிகளில் வெறும் 33,000 வாக்குகளை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் தரவுகளில்..

முதல் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18 - 20 வயது உடையவர்கள் அல்ல.

80 வயது நபர் ஒருவர் முதல் முறை வாக்காளர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு தொழிற்சாலையில் பல வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில வாக்காளர்களுக்கு புகைப்படங்களே இல்லை.

ஒரே தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40,009 பேர் இல்லை.

ஒரே வாக்காளரின் பெயர், பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளன.

பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை.

நாடு முழுவதும் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளன.

மகாதேவபுரா தொகுதியில் தோல்வி ஏன்?

காங்கிரஸ் ஏழு தொகுகிளில் ஆறு தொகுதிகளை வென்று, மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் மட்டும் 1,14,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்று தெரிவித்துள்ளார் ராகுல்.

கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் காங்கிரஸ் குழு, ஒரு லட்சம் போலி வாக்காளர்களை அடையாளம் கண்டுள்ளது. போலியான முகவரி கொடுத்து வாக்காளர்கள் பெரிய அளவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

மகாதேவபுரா பேரவைத் தேர்தலின்போது, 6.5 லட்சம் வாக்குகளில் 1 லட்சம் வாக்குகள் போலியானவை.

இது மட்டுமல்ல, மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள், பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதை எங்களுக்கு உறுதி செய்ததாகவும் ராகுல் கூறியிருக்கிறார்.

பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை. அடையாளம் காணும்படி இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இப்படி ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மோசடியான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்கும் வகையில் தரவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ராகுல் காந்தி.

நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களை அழித்து, மோசடியை மறைக்கப் பார்க்கிறது தேர்தல் ஆணையம் என்றும் தெரிவித்துள்ளார் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com